Monday, November 11, 2013

நோபல் பரிசு: பரிசுகளின் வரலாறும் வரலாற்றின் பரிசும்

நோபல் பரிசு உலகில் வழங்கப்படுகின்ற பரிசுகளில் மிகவும் பிரபலமானதும் முக்கியமானதுமான விருதாகும். இப்பரிசுகளின் உருவாக்குனர் சுவீட நாட்டைச் சேர்ந்த அல்பிரெட் நோபெல் ஆவார். இவர் பல அறிவியல் கண்டுபிடிப்புக்களைச் செய்தவராவார். இவர் டைனமைட்டைக் கண்டுபிடித்ததன் மூலம் பெரும் பணக்காரானார். வெடிபொருட்களை உற்பத்தி செய்வது, அதற்கான ஆயுதங்களைச் தயாரிப்பது என போரியல் ஆயுத விற்பனையே இவரது பிரதான தொழிலாக இருந்தது. 1988ம் ஆண்டு - இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் - தனது சொந்த மரண இரங்கல் செய்தியை பத்திரிகையில் வாசிக்கக் கிடைத்தது. இவரது சகோதரரின் மரணத்ததை தவறுதலாக இவருடையது எனக்கருதிய பிரெச்சுப் பத்திரிகையொன்று 'மரண வியாபாரியின் மரணம்' என்ற தலைப்பில் இரங்கலொன்றை எழுதியிருந்தது.

இது, தான் இவ்வாறுதானா உலகால் நினைவுகூரப்படப் போகிறேன் என்ற கேள்வியை இவர் மத்தியில் எழுப்பியது. இதன் விளைவால் இவரால் உருவாக்கப்பட்டதே நோபெல் பரிசுகள் ஆகும். இவர் தனது உயிலில் மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான பரிசை சுவீடன் வழங்கவேண்டும் என்றும் சமாதானத்திற்கான பரிசையை நோர்வேயின் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் தெரிவுசெய்து வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார். சுவீடன் ஆதிக்க நோக்குடைய நாடாக இருந்ததும் நோர்வே யாருடைய பக்கமும் சாராத நடுவு நிலைமையை வெளியுறவுக் கொள்கையையும் கொண்டிருந்தபடியால் அரசியல் நெருக்குவாரங்களோ சொந்த நலன்களுக்கு அப்பால் இந்த சமாதானத்திற்கான பரிசு வழங்கப்பட வேண்டும் என நொபெல் விரும்பினார். இந்த அடிப்படையில் 1901ம் ஆண்டிலிருந்து நொபெல் பரிசுக்கு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

அல்பிரெட் நோபலை கௌரவிக்கும் முகமாக பரிகளைத் தெரிவுசெய்யும் முறைக்கான செலவுட்பட சகல நிர்வாகச் செலவுகளையும் சுவீடனின் மத்திய வங்கி ஏற்றுக்கொண்டது. இன்று உலகில் இயங்கிவரும் மிகப் பழைய மத்திய வங்கி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.  1968ம் ஆண்டு தனது நூறாவது ஆண்டு நிறைவைப் நினைவுகூரும் முகமாக பொருளாதாரத்துக்கான நோபெல் பரிசு அறிமுகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

நொபெல் சமாதானப் பரிசும் இலக்கியப் பரிசும் ஏகாதிபத்திய அரசியல் நோக்கங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. முற்றிலும் தகுதி வாய்ந்தோராகத் தெரிகிற எவருக்கேன் அப்பரிசு இடையிடை கிடைத்திருந்தால் அது மற்ற நேரங்களில் வழங்கப்படுகின்ற பலவற்றைத் தகுதியுடையனவாகக் காட்டுவதற்காகவே. எனினும், குறிப்பிடத்தக்களவு உலக முக்கியம் பெற்றோரே இப்பரிசுகளைப் பெறுகின்றனர். இப்பரிசுகள் பற்றி வலியுறுத்த விரும்புவது அவை நடுநிலையான முடிவுகளின் படி கிடைப்பதில்லை என்பதையே. பொருளியலுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் பெரும்பாலும் ஏகாதிபத்திய, முதலாளியப் பொருளியலின் நியாயங்களை ஏற்போருக்கே கிடைத்துள்ளன. அமர்த்யா சேனுக்குப் பரிசு கிடைத்தபோது அதுபற்றி மூன்றாமுலகிலும் முக்கியமாக இந்தியாவிலும் பெருமகிழ்ச்சி காணப்பட்டது.பொருளியல் விருத்திக்கு ஒரு மனித மேம்பாட்டு வளர்ச்சிப் பரிமாணத்தை வழங்கியதற்காக அவர் மெச்சப்பட்டார். எனினும், முற்றிலும் முதலாளிய மறுப்பான மாற்றுப் பொருளியல் சிந்தனையாளர் எவரும் இதுவரை நொபல் பரிசு பெறவில்லை.

உலகின் எந்தவொரு விருதும் பரிசும் பெறுபவரின் திறமையை எடுத்தியம்பும் கட்டியங்களல்ல. விருதுகளும் அத்தனை புனிதமானவை அல்ல. இது இலங்கையில் வழங்கப்படும் சாகித்திய விருது தொட்டு ஆஸ்கார் விருது, நோபல் பரிசு வரை எல்லா விருதுகளுக்கும் பொருந்தும். இருந்தாலும் கூட சமாதானத்திற்கான நோபல் பரிசு குறித்த பெருத்த எதிர்பார்ப்பு இன்னமும் இருந்து வருகிறது. ஆனால் உலகின் மிகப்பெரிய கொலைகாரர்களான கென்றி கிஸிஞ்சர், அல் கோர், ஜிம்மி காட்டர் முதற்கொண்டு ஆபிரிக்க மக்களை மனிதர்களாகவே மதிக்காத அல்பேர்ட் சுவைச்சர் வரை சமாதானத்தோடு தொடர்பில்லாதவர்களுக்கே இப்பரிசு காலகாலமாய் வழங்கப்பட்டு வந்துள்ளது.

2009 இல் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வழங்கப்பட்ட சமாதானத்துக்கான நோபெல் பரிசு கண்டணத்துக்குட்பட்டது. நோபல் பரிசுக்கு பெயர்களை பரிந்துரைக்க கடைசித்தேதி பிப்ரவரி 1 அதாவது ஒபாமா, பதவியேற்ற 12 நாட்களில் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அந்தப் 12 நாட்களில் உலக சமாதானத்திற்காக ஒபாமா பெரிதாக ஒன்றும் கிழிக்காவிட்டாலும் அதை தொடர்ந்த காலங்களில் உலக சமாதானத்திற்காக அவர் நிறையவே கிழித்திருக்கிறார். இஸ்ரேலின் தாக்குதல்களை நியாயப்படுத்தியது, நோபல் பரிசு பாகிஸ்தானிய பழங்குடிமக்களை குண்டு போட்டுக் கொன்றது, ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் மக்களைக் கொல்வது உட்டபட்ட இன்ன பல நற்காரியங்களை செய்வது, இலங்கையில் ஒரு மனிதப்பேரவலம் நடக்கும் போது அமைதிகாத்தது என எவ்வளவோ செய்திருக்கிறார். இவை ஒவ்வொன்றுமே தனித்தனி நோபல் பரிசு பெறுமளவுக்கு தகுதிவாய்ந்த அற்புதமான விடயங்கள்


2010இல் சீனாவின் மனித உரிமைப் போராளியொருவருக்கு பரிசு வழங்கி தனது சீன எதிர்ப்பு அமெரிக்க ஆதரவு சாய்வை மீண்டுமொருமுறை நிரூபித்த சமாதானப் பரிசுக் கமிட்டி தனி மனிதர்களுக்கு வழங்கி மிகவும் வாங்கிக் கட்டிக்கொண்டதால் கடந்த ஆண்டு ஆட்களுக்கு வழங்காமல் அமைப்பொன்றுக்கு வழங்கினால் ஆபத்தில்லை என்று கருதி ஜரோப்பிய ஓன்றியத்துக்கு வழங்கியது.

சர்வதேச போர்களின் புள்ளிவிபரங்களின்படி நொபெல் பரிசுக்குழு ஜரோப்பிய ஓன்றியத்தைப் புகழுகின்ற அமைதி மிக்க அறுபது ஆண்டுகளில் 33 போர்கள் நடைபெற்றள்ளன. பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்னமும் சனநாயக மறுப்பும் மனித உரிமை மீறல்களும் நிறைந்து கிடக்கின்றன. இன்னொரு புறம் ஜரோப்பிய ஓன்றியத்தின் இராணுவக் கரமாக செயற்படுகின்ற நேட்டோ உலகெங்கும் போர்களில் ஈடுபட்டு குண்டுவீசி இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று நிலைநாட்டிய சனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் சேர்த்துத்தான் இந்தமுறை நொபெல் பரிசு ஜரோப்பிய ஓன்றியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார ரிதியில் இப்போது ஜரோப்பிய ஓன்றியம் தட்டுத்தடுமாறுகிறது. வேலையின்மைக்கும் அவர்களது சமூகப் பாதுகாப்பைக் காவுகொல்லும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை காவல் துறையினர் வன்முறையை பிரயோகித்து அடக்குகின்றனர். மக்களின் நியாயமான போராட்டங்களுக்கெதிராக அராஜகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. கொஞ்சக்காலமாக அது தனது ஓன்றியத்தில் உள்ள திவாலான நாடுகளை பிணையெடுக்கின்றன. ஆனால் நெருக்கடி இன்னமும் மோசமாயுள்ளது. இதனால் தன்பங்குக்கு நோபல் பரிசு ஜரோப்பிய ஓன்றியத்தைப் பிணையெடுத்தது

மொத்தத்தில் பரிசுகளைப் பொறுத்தவரையிலோ பட்டங்களைப் பொறுத்தவரையிலோ பெருமளவும் அவை அவற்றைப் பெறுகிறவர்களைப் பற்றிச் சொல்லுவதை விடக் கொஞ்சம் அதிகமாக அவற்றை வழங்குபவர்களைப் பற்றியும் வழங்கப்படுவதற்கான நோக்கங்கள் பற்றியும் சொல்லுகின்றன. இது எல்லாப் பரிசுகளுக்கும் பொருந்தும்.

Friday, March 8, 2013

சமூக உற்பத்தியில் பெண்கள்


பெண்கள் மீதான ஒடுக்குமுறை அவர்களது உயிரியல் அடிப்படையிலானதன்று. மாறாக, அதன் தோற்றதுக்குப் பொருளியல், சமூகப் பரிமாணங்கள் உள்ளன.
எக் காலத்தும், சமூக உற்பத்தியிற் பெண்களின் பங்கு சமூக உற்பத்திச் சக்திகளின் விருத்தியிலும் உற்பத்தி உறவுகளிலும் தங்கியிருந்துள்ளது.
எனவே பெண்கள் மீதான பால் அடிப்படையிலான ஆதிக்கமும் ஒடுக்கலும் முழுச் சமூகத்தினதும் சுரண்டல் அடிப்படையிலான உற்பத்தி உறவுகளினின்று பிரித்து நோக்க இயலாதது.

சமூக உற்பத்தியில் பெண்களுக்கு விதிக்கப் பட்ட இடம் சமூக அமைப்புக்களின் மாற்றத்துடன் மாறி வந்துள்ளது.
வர்க்க சமூகத்தின் தோற்றதுக்கு முன், அதாவது "ஆதி கம்யூனிச" சமூகம் எனப்படும் அதி தொன்மையான சமூகத்தில் உற்பத்தி சமூக அடிப்படையில் அமைந்திருந்தது.
உற்பத்தியின் பயன்கள் சமமாகப் பகிரப்பட்டன.
உண்மையிற், சமூக உற்பத்தியின் உயர்விற் பெண்களின் பங்கு ஆண்களினதை விட மேலானதாக இருந்ததெனவுங் கூறலாம்.

சமூகத்தில் பெண்களின் தாழ்வு  தனியார் சொத்துடைமையாலும் குடும்பம் எனும் அமைப்பாலும் சமூக உற்பத்தியில் அவை நிர்ணயித்த வேலை ஒதுக்கீட்டாலும்  உருவானது.
வர்க்க அடிப்படையிலான வேலைப் பிரிவினை எவ்வாறு தொடங்கியதென்றோ அது எவ்வாறு பெண்கள் மீதான ஆதிக்கத்துக்கு இட்டுச் சென்றதென்றொ திட்டவட்டமாகக் கூற இயலாது.
எனினும், உற்பத்திச் சாதனங்கள் மீது (முதலில் மண்ணும் விவசாயக் கருவிகளும் விலங்குகளும்) தனியார் ஆதிக்கத்திற்குட்பட்டதோடேயே ஆணாதிக்கம் தொடங்கியது என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
அதன் பின்பு, அடிமைகளையும் உற்பத்திக் கருவிகளையும் போன்று பெண்களும் ஒரு ஆணின் உடைமையாக நேர்ந்தது.
பெண்களின் சமூக உற்பத்தி மூலம் அவர்களுக்குப் பொருள் மீது, முக்கியமாக சமூகத்தின் உற்பத்திச் சாதனங்கள் மீது, ஆதிக்கம் ஏற்படாவாறு சொத்துடைமை ஆண்களின் வசமாக்கபட்டது.
இவ்வாறு பெண்களின் உற்பத்திப் பங்களிப்பில் ஆணுக்குச் சேவையாற்றுவதும் அடுத்த தலைமுறை ஒன்றன் தோற்றமும் பராமரிப்பும் முதன்மை பெற்றன.
இதிற் குடும்பம் என்ற அமைப்பின் பங்கு முக்கியமானது எனக் காணுகிறோம்.

அடிமைச் சமுதாயத்திலும் பின்னர் வந்த நிலவுடைமைச் சமுதாயத்திலும் உழைக்கும் வர்க்கங்களில் இருந்த பெண்கள், மேலதிகமாக உடல் உழைப்பிலும் பங்குபற்றும் தேவை இருந்தது.
இவ்வாறு சமூக உற்பத்தியில் தமது ஆளுமை மறுக்கப் பட்ட பெண்கள் இயற்கையிலேயே, தமது உயிரியலமைப்புக்கமைய உடலாலும் உள்ளத்தாலும் ஆண்களிலும் கீழானோராகக் கொள்ளப்பட்டனர்.

முதலாளியம் பெண்ணை ஒரு உற்பத்திக் கருவியாக மட்டுமன்றி ஒரு பன்முகப்பட்ட நுகர்பொருளாகவும் வடிவமைத்துள்ளது.
முதலாளியம் தன் உற்பத்தியைப் பெருக்கி லாபத்தைக் குவிக்க இயலுமான வரை கூடிய உழைப்புச் சக்தியை வேண்டுகிறது. எனவே நவீன உற்பத்தியிற் பெண்கள் பங்கு பற்றுவது காலப் போக்கிற் தவிர்க்க இயலததாகியது.
எனினும் இது பெண்களுக்குச் சமத்துவத்தை கொண்டு வரவில்லை, மாறாக அவர்கள் மீதான சுரண்டற் சுமையை வலுப்படுத்தியுள்ளது.
முதலாளியம் குடும்பம் பற்றிய நிலவுடமைக் காலச் சிந்தனையைத் தனக்கு வசதியாகப் பயன்படுத்துகிறது.
அதே வேளை, பெண்ணை ஒரு நுகர்பொருளாக்குவது குடும்பம் என்கிற எல்லைக்கு அப்பாலும் விரிவடைந்துள்ளது.
சேவைத்தொழில்கள் என்பனவற்றின் விருத்தியுடன் பெண்ணின் உடல் வணிக நோக்கிலான சுரண்டலுக்கேற்பப் பலவாறாகவும் வடிவமைக்கப் பட்டு வருவது கவனிப்புக்குரியது.

தொழில் பார்த்தல் என்பது குடும்ப உழைப்பிலிருந்து விடுதலை என்று தோன்றினாலும் உண்மையிற் பெண்கள் மீதான உழைப்புச் சுமை அதனாற் குறையவில்லை.
ஊதியமில்லாத குடும்ப உழைப்பு, குறைந்த ஊதியத்திற்கான சமூக உற்பத்தி, தமக்காகப் போராடும் வலிமையின்மை எனும் வகைகளில் இன்று பெண்கள் முதலாளியத்தால் மிக அதிகம் சுரண்டப்படுகின்றனர்.

பெண் விடுதலை என்பது பால் அடிப்படையிலானதாக மட்டுமன்றறி உற்பத்தியிற் பெண்களின் சமூக நிலையையும் சார்ந்துள்ளது என்பதை இத்தால் வலியுறுத்த வேண்டியுள்ளது.

- 2012 ம் ஆண்டு மகளீர் தினத்தை முன்னிட்டு சமூக விஞ்ஞான வட்டத்தில் கலந்துரையாடப்பட்டவை.