Monday, February 25, 2013

காதல்


திருமணம் என்பது ஒரு சமூக ஏற்பாடு. காதல் என்பது இருவருக்கு இடையிலான நேசம். திருமணம் என்பது குடும்பம் என்ற ஏற்பாடு உருவான பின்னரே படிப்படியாக ஒவ்வொரு சமூகத்திலும் நிலை பெற்றது. காதல் என்பது இயல்பான மனநிலை சார்ந்த விடயம். காதல் என்பது தெய்வீகமானதோ புனிதமானதோ புறவுலகிற்கு அப்பாற்பட்ட சிந்தனைகளால் உருவமைக்கப்பட்ட ஒன்றோ அல்ல. யார் எவ்வாறு முயன்றாலும் அதில் உடல்சார்ந்த பாலியல் வேட்கைகளின் அடிப்படையான பங்கை மறுதலிக்க இயலாது. எனினும் வெறித்தனமான இச்சைக்கும் காதலுக்கும் வேறுபாடு உண்டு. ஏனெனில் முன்னையதில் வெறுமனே ஒரு வேட்கையைத் தனிப்பதற்கு மேலாக வேறு எதுவும் இல்லை.

குடும்பம் என்பதிலிருந்து திருமணம் என்கிற சடங்கு உருவானதன் காரணம் சமூகத்தில் ஆணை முதன்மைப்படுத்தும் தன்மை மேலும் இறுக்கம் பெற்மையேயாகும். வெகு சில சமூகங்கள் விலக்காக ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் என்பது விதியாகவும் ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்பது பொதுவாக விரும்பத்தக்க நடத்தையாகவும் உள்ளன. இதில் முதற் பகுதி ஆணாதிக்கத்தின் தெளிவான வெளிப்பாடு மற்றது ஒரு சமூகத்தின் உறுதிப்பாட்டிற்குத் தேவையானமையாற் காலப்போக்கில் உருவானது. முன் குறிப்பிட்ட விலக்குக்கள் போக ஏனைய சமூகங்களில் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் பாலியல் உறவு வைத்திருப்பது கடுந் தண்டனைக்குரிய குற்றமாயிருக்கும் அதே வேளை ஒரு ஆண் பல பெண்களுடன் பாலியல் உறவு வைத்திருப்பது பல இடங்களில் ஏற்கப்பட்ட நடத்தையாகவும் விரும்பத்தாகததான சூழ்நிலைகளிற் கூடப் பெரும்பாலும் மன்னிக்கக் கூடியதாகவோ கவனிப்பில் எடுக்கப்படாததாகவோ இருக்கிறதைக் காணலாம். இவ்விதமான ஆண்-பெண் உறவைக் காதல் என்ற வகையினதாக ஒரு சமூகம் கருதுவது அருமை. இது திருமணமும் காதலும் புனிதப்படுத்தப்பட்டதன் விளைவு என்றே நினைக்கிறேன்.

பெண்ணைப் பொறுத்த வரையில் பொதுவாகவே திருமணமும் காதலும் நிரந்தரம் என்ற கட்டுப்பாட்டுக்கு உட்படுகின்றன. திருமணத்தை நிரந்தரமாக்குவது சமூகங்கட்கு இயலுமானது. எனினும் காதலை நிரந்தரமாக்குவது இயலாதது. இருவரிடையிலான நேசம் குடும்ப வாழ்க்கையின் வழிப்பட்ட தொடர்ச்சியான உறவாடல் மூலம் வருப்படத் தவறி நாளடைவில் வலுவிழந்து இல்லாமற் போகவும் இயலும். காதலின் இடத்திற் கடும் பகை கூட வந்து சேரலாம். இவ்வாறான நிலைமைகளில் மணமுறிவுக்கான உரிமை சம்பந்தப்பட்டோரின் தனிப்பட்ட நன்மைக்கும் குழந்தைகள் இருந்தால் பொதுவாக நாம் நம்புவதற்கு மாறாகக் குழந்தைகளின் நன்மைக்கும் ஏற்றது. எனினும் குடும்பத்தைத் தனது அடிப்படையான ஒரு அலகாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பிற் குடும்பங்களின் சிதைவு சமூகத்தின் சீரழிவுக்கு வழி செய்யலாம் என்பதால் குடும்ப அமைப்பைக் காப்பாற்றுகிற முயற்சிகள் சமூகத்தின் பலவேறு மட்டங்களிலும் மேற்கொள்ளப் படுகின்றன.

நிலவுடைமைச் சமூகத்தின் வளர்ச்சியோடு ஓட்டி உறுதிகண்டு நிலவுடைமைச் சமூகச் சிந்தனையின் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வந்த திருமணம் குடும்பம் என்கிற அமைப்புக்கள் முதலாளியத்தின் வருகையோடு மெல்மெல்ல ஆட்டங்கண்டு எல்லாவற்றையும் விற்பனைக்குரியனவாகக் கருதுகிற முன்னேறிய முதலாளியச் சூழலில் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. திருமணம் செய்யாமலே ஒன்றாக வாழுதல், திருமணமானவர்கள் குறுகிய காலத்திலேயே பிரிதல், ஒருவர் அடுத்தடுத்துப் பல முறை திருமணஞ் செய்தல் என்பன இன்று மேற்கின் முதலாளியச் சூழலில் ஏற்கப்பட்ட நடத்தைகளாகி விட்டன. இவை முதலாளிய சமூகத்தின் விளைவான சிக்கல்கள். இவ்வாறான போக்குக்கள் நிலவுடைமைச் சமூகச் சிந்தனையினின்று இன்னமும் சரியாக விடுபடாத ஆசிய முதலாளியச் சமூகங்களிலும் தன் பாதிப்பைச் செலுத்தக் காணலாம். அவற்றின் சரி பிழைகளை அவை நிகழும் சமூகச் சூழலிலிருந்து பிரித்து மதிப்பிடுவது சரியாகாது. எனினும் நமது விழுமியங்கள் நாம் பழக்கப்பட்ட சமூகச் சூழலின் சிந்தனையின்றும் நடைமுறையின்றும் எளிதில் விடுபடுவதில்லை என்பதையும் ஏற்றாக வேண்டும்.
 
திருமணங்கள் எல்லாமே விருப்பத்திற்கு இடமின்றியோ காதலுக்கு இடமின்றியோ நடந்திருக்கத் தேவையில்லை. எனினும் குறிப்பிட்ட குடும்பச், சமூக வரையறைகட்கு வெளியே மணமாகாத வயதுவந்த ஆணும் பெண்ணும் சந்திக்கிற வாய்ப்பு மறுக்கப்படுகிறது. வர்க்கம் என்பதற்கு மேலாகச் சாதி என்பது இன்னொரு கட்டுப்பாடாக அமைகிறது. எனவே காவியங்களிலும் இலக்கியங்களிலும் காதலாகவும் சுயம்வரம் போன்று பெண்களின் சுயாதீனமான தெரிவுகளாகவுங் காட்டப்படுவனவும் உண்மையில் மிகவும் வரையறுக்கப்பட்ட தெரிவுகளே அல்லாமல் முழுமையான சுதந்திரமான தெரிவுகளல்ல.

கொலனியத்தின் வருகையையடுத்து முதலாளிய உற்பத்தி உறவுகள் நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளின் இடத்தைப் பிடித்துக் கொண்டாலும் நிலப்பிரபுத்துவ சமுதாயச் சிந்தனைகளிலிருந்து நமது சமூகங்கள் விடுபடவில்லை. எனவே திருமணங்கள் பெருமளவும் ஏற்பாடு செய்யப்பட்டவாறு அல்லது ஏற்கக் கூடிய சமூக எல்லைகட்கு உட்பட்டவாறு நடைபெறுகின்றன. இந்த எல்லைகள் கொஞ்சம் விரிவு கண்டுள்ளன என்பது உண்மை. எனினும் தமிழரிடையே வர்க்கம், பொருள் வசதி, சாதி என்பன திருமணத்தைத் தீர்மானிப்பதில் இன்னமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நகரச் சூழலில் இவ்வாறான எல்லைகளை மீறிக் காதல் என்ற அடிப்படையிலும் பிற தகுதிகளின் அடிப்படையிலும் திருமணங்கள் நடக்கின்றன. ஆனால் அவை சமூக வேறுபாடுகளைத் தகர்ப்பதற்கு மாறாக அவற்றை உள்வாங்கிக் கொள்கிற தன்மையையும் நாம் காணலாம்.

வேறுபட்ட வர்க்கம் அல்லது சாதியைச் சேர்ந்த இருவர் மணமுடிக்கும் போது இரு குடுபத்தினரும் சாதியச் சிந்தனைகளிலிருந்து விடுபட்டவர்களாக இல்லாதுபோனால் தம்பதிகள் இரண்டு குடும்பங்களையும் இணைக்கிற சமூகப் பாலமாக அமைய இயலாது போகிறது. எனவே இரண்டு சமூக அடையாளங்களில் ஒன்றிற்குள் அவர்கள் உள்வாங்கப்படுகின்றனர். நவீன முதலாளியச் சூழலில் அவர்கள் வேறொரு அடையாளம் பெறலாம். நமது சூழல் அப்படியானதல்ல.

காதல் வரலாறு


எகிப்து

எகிப்தைப் பொருத்தமட்டில் காதல் பற்றி இரு முக்கிய எண்ணங்கள் காணப்பட்டன. ஒன்று காதல் அடிமைப்படுத்தும் சக்தியைக் கொண்டது, மற்றயது ஒரு காதலுக்கு ஒரு பெண் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் ஆண் இல்லாமல் இருக்கக் கூடாது. எகிப்திய கல்வெட்டுகளில் காதலைக் குறிக்கும் சின்னமாக ஒரு முக்கோணம், ஒரு வாய், ஒரு ஆண் என்ற மூன்றும் செர்ந்து அமைவதாகவும் இது ஆணை முக்கியத்துவப்படுத்திக் காட்டுவதாகவும் உள்ளது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மற்றும் ஒருகாதல் திருமணத்தை நோக்கியதாக அமையவில்லை. காதலுக்கு பின் திருமணம் என்பது கட்டாயமாக இருக்கவில்லை.

பண்டைய கிரேக்கம்

பண்டைய கிரேக்கத்தில் காதல் என்பது ஐந்து வகையாகப் பிரித்து நோக்கப்பட்டது. ஆன்மாவின் காதல், உடலின் காதல், அறிவின் காதல், இரத்த உறவுகளிடையே காணப்படும் இயற்கைக் கவர்ச்சி, விருந்தினருக்கும் விருந்தோம்பல் செய்வோருக்குமிடையிலான அன்பு என ஐந்து பகுதிகளாக அது பார்க்கப்பட்டது.

அத்துடன் இரு ஆண்களுக்கிடையிலான காதல் பரவலாகக் காணப்பட்டது. இதனை யாரும் எதிர்க்கவில்லை.

ரோம்

கிரேக்கத்திலும் எகிப்ப்திலும் பெண்கள் வீடுகளை சார்ந்தவர்களாய் இருந்தனர். ரோமில் பெண்கள் சற்று அதிக சுதந்திரம் பெற்றிருந்தனர். இதனால் ரோமின் காதலில் பெண்களுக்கு சற்றே அதிக முக்கியத்துவம் கிடைத்தது.

காதலில் திருமணத்தினதும் குடும்பத்தினதும் முக்கியத்துவம் சற்றே அதிகரித்துக் காணப்பட்டது.

ரோமில் காதலின் முக்கியத்துவம் குறித்து சில ஆய்வாளர்கள் பின்வரும் கருத்தைக் கொண்டிருந்தனர். அதாவது கிரேக்கர்கள் தமது உடலைப் பயிற்சியின்மூலம் சீராய்ப் பேணினர், ஆனால் ரோமர்கள் ஓய்வின் மூலம் தமது உடலைப் பேணினர். இவர்களின் ஓய்வில் கலையும் காதலும் மட்டுமே இருந்தது என்பார்கள்.

பேர்ஸியா

பேர்ஸியாவின் இலக்கியங்களில் காதல் முக்கிய பாடுபொருளாக இருந்தது. காதல் மிகவும் புனிதத் தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டு வந்தது. அத்துடன் முக்கியமான ஒரு கருத்தும் இருந்தது. என்னவெனில், எல்லாம் காதலால் சூழப்பட்டிருந்தது எல்லாம் காதலுக்காயும் இருந்தது.

Sunday, February 10, 2013

கண்காணிப்புத் தொழிநுட்பங்கள்


கொழும்பு வீதிகளில் தற்போது கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் வீதிகளையும் ஆர்ப்பாட்டக்காரர்களையும் கண்காணித்தவண்ணம் வலம் வருகின்றன. தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாகப் பேசிக்கொள்ளப்படுகிறது. இணையத்தில் நாம் பகிரும் விடயங்கள் கண்காணிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் "கண்காணிப்பு" பற்றியும் அதற்குப் பயன்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் பற்றியும் நாம் தேடிக் கற்றுக்கொள்ளவேண்டியதாக உள்ளது. 

ஒற்றர்களைப் பயன்படுத்துதல், தொலைக் காட்டிகளைப் பயன்படுத்துதல் போன்ற பழைய முறைகளிலிருந்து வான்வழிக் கண்காணிப்பு, செய்மதிக் கண்காணிப்பு, புதுப்புதுத் தொழிநுட்பங்களின் துணையுடனான கண்காணிப்பு என்று கண்காணிப்பதற்கான முறைகள் வேகமான வளர்ச்சியடைந்து வருகின்றன. 

குறித்த செயற்பாட்டையோ, குறித்த விடயத்தையோ எமது கட்டுப்பாட்டுக்குள் நாம் வைக்கவேண்டி இருந்தால் ஒன்று அச்செயற்பாட்டினை, அல்லது மற்றவர்கள் அவ்விடயத்தை  அணுகுவதைத் தடை செய்ய வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அணுக்கத்தைக் கட்டுப்படுத்தாமல், தடை போடாமல் சுதந்திரமாக விட்டுக் கண்காணிக்க வேண்டும். 

இவ்வாறாகக் கண்காணிப்பு என்பது "கட்டுப்படுத்துவதுடன்" மிகவும் நெருக்கமானது. அரசுகளே உலகின் மிகவும் சக்திவாய்ந்த "கண்காணிக்கும்" அதிகாரங்களாக இருக்கின்றன. 

மிக நவீன கண்காணிப்புத் தொழிநுட்பங்களைப் பயன்படுத்தாத அரசுகள் தடைபோடுவதன் மூலமும் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வெகுமக்கள் மீதான ஆயுத அடக்குமுறைகள் மூலமாகவும் மக்களைக் "கட்டுப்பாட்டுக்குள்" வைத்திருக்க முயல்கின்றன. இவ்வாறான நாடுகள் சர்வாதிகார நாடுகளாகவும் மனித உரிமைகளை மீறும் நாடுகளாகவும் மேற்குலகின் ஊடகங்களால் பிரசாரம் செய்யப்படுகின்றன. ஆனால் அதேவேளை மேற்குலகமோ ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளோ மக்கள் மீதான மிகப்பயங்கரமான கட்டுப்பாட்டினை அதி நவீன கண்காணிப்புத் தொழிநுட்பங்களின் நடைமுறைப்படுத்துகிறது. இது பார்வைக்கு மக்கள் சுதந்திரம் பெற்றிருப்பதுபோல் தோற்றம் காட்டுகிறது. 

கண்காணிப்புத் தொழிநுட்பங்கள் பின்வரும் பரப்புக்களின் இன்று வளர்ச்சியடைந்துள்ளன :

கணினி 

கணினிகளைக் கண்காணிப்பதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நச்சு நிரல்களையும் உளவுபார்க்கும் நிரல்களையும் அரசுகளே தயாரித்து விநியோகித்திருப்பதற்கான சான்றுகள் பல இன்று கிடைக்கின்றன. அமெரிக்காவின் FBI நிறுவனம் கணினிகளைக் கண்காணிப்பதற்காக Magic Lantern எனும் உளவுபார்க்கும் நிரலினை தயாரித்துப் பயன்படுத்தியமை இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். 

இதுதவிர கணினியின் வேறு மென்பொருட்களும் இயங்குதளங்களும் கூட பயனர் பற்றிய தகவல்களை அவர் அறியாமலே வேறொரு நிறுவனத்துக்கோ தனி நபருக்கோ அனுப்பக்கூடியவண்ணம் உருவாக்கப்பட முடியும். 

தொலைபேசி

தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது தொடக்கம் தொலைபேசிக் கருவியை அடிப்படையாகக்கொண்ட வேறுபல சேவைகள் மூலம் கண்காணித்தல் வரை இதனுள் அடங்குகிறது. 

அமெரிக்காவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான AT & T நிறுவனமும் Verizon நிறுவனமும் அமெரிக்க அரச நிறுவனங்களிடமிருந்து ஆண்டொன்றுக்கு 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை தமது பயனாளர்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக மட்டும் பெறுவதாக தகவல் வெளிவந்துள்ளது. 


மில்லியன்கணக்கான மக்களின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்து ஒட்டுக்கேட்பதென்பது நேர விரயமாகவும் அதிக ஆள்பலம் தேவைப்படும் ஒன்றாகவுமே இருந்துவந்ததாயினும் குரல் உணரி மென்பொருட்களின் வருகைக்குப்பின் மிகவும் எளிமையான ஒன்றாக மாறியுள்ளது. இம்மென்பொருட்கள் குரலை உணர்ந்து, பேசப்படுபவற்றை உரை வடிவில் சேமிப்பதுடன், அவ்வுரையிலிருந்து தேவையான தகவல்களை நொடிப்பொழுதில் தேடித்தரவல்லனவாகவும் இருக்கின்றன. 

செல்பேசிக்கருவியின் ஒலிவாங்கியினை, இணையம் வழியாக தூர இருந்து பயனர் அறியாமல் இயக்கி ஒட்டுக்கேட்கும் வழிமுறைகள் அமெரிக்க, ஐக்கிய இராச்சிய அரசுகளிடம் இருப்பதாகவும் தகவல் உண்டு. 

இவை தவிர GPS எனப்படும் தொழிநுட்பம் மூலம் குறித்த செல்பேசிப்பயனாளர்களின் இருப்பிடம், நடமாட்டம் அனைத்தையுமே துல்லியமாகக் கண்காணித்து அத்தகவல்களைச் சேமித்துப் பயன்படுத்தும் வசதிகளும் இன்று உள்ளன. 

ஒளிப்படக்கருவிகள் 

இது நாம் வெளிப்படையாகக் காணும் கண்காணிப்புப் பொறிமுறையாகும். ஒளிப்படக்கருவிகள் வழியாகப் பிடிக்கப்பட்டுச் சேமிக்கப்படும் வீடியோக் கோப்புகளில் இருந்து குறித்த முகத்தை மட்டும் குறுகிய நேரத்தில் தேடி எடுத்துக் கண்காணிப்பதற்கான முகம் உணரும் தொழிநுட்பங்கள் இன்று பயன்பாட்டில் உள்ளன. 

சமூக வலையமைப்புப் பகுப்பாய்வு

Facebook, Twitter, Google+ போன்ற சமூக வலையமைப்புக்களில் ஒவ்வொருவரும் பகிரும் சொந்த விபரங்கள், எழுத்துக்கள், படங்கள் போன்றனவற்றை எல்லாம் முறைப்படி கணினி மென்பொருள்களின் துணையுடன் ஆய்வு செய்து குறித்த நபரையோ அமைப்பினையோ கண்காணிப்பதற்கான வழிமுறைகள் இன்று பிரபலமடைந்துள்ளன. இத்துறையானது Scalable Social Network Analysis (SSNA) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 

இவ்வாறு கண்காணிக்கும் துறை மிகவும் வளர்ச்சியடைந்திருப்பதுடன், இக்கண்காணிப்புப் பொறிமுறைகளை எளிமைப்படுத்துவதற்காக Hancock எனும் கணினி நிரலாக்க மொழியினை AT & T நிறுவனம் உருவாக்கியுள்ளது. 

இவைதவிர, உயிரியல் தகவல்களைக் கண்காணித்தல், வான்வழியாக, செய்மதியூடக, கண்காணிக்கும் சில்லுகள் பொதியப்பட்ட அடையாள அட்டைகள் ஊடாக கண்காணிக்கும் வழிமுறைகள் எல்லாம் இன்று பயன்பாட்டில் உள்ளன. 

பயங்கரவாதம், சமூகவிரோதச்செயல்கள் போன்றவற்றைத் தடுப்பதற்குக் கண்காணிப்புப் பொறிமுறைகள் தேவைப்படுகின்றன என்று கண்காணிப்புக்குச் சாதகமாக வாதிடப்படுகிறது. 

"நாம் சரியாக இருந்தால் கண்காணிப்புக்கு அஞ்சுவானேன்?" என்று வினவப்படுகிறது. 

ஃபூக்கோவின் கருத்துப்படி கண்காணிப்புத் தொழிநுட்பமானது, காவல்துறையின் அவசியம் இன்றி ஒவ்வொரு தனி மனிதரும் தமக்குத்தாமே உளவியல் ரீதியாக காவல் துறை அதிகாரி போன்று செயற்படும் நிலையை உருவாக்குகிறது. கண்காணிக்கப்படுகிறோம் என்ற எண்ணமே எமது செயற்பாடுகளை நாமே முடக்கிவிடக் காரணமாகிறது. 

கண்காணிப்புத் தொழிநுட்பங்கள் உண்மையில் அதிகாரம் உள்ளவர்களின் கைகளில் மேலும் மேலும் அதிகாரங்களைக் குவிக்கிறது. இது மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட அதிகாரமாகும். இத்தகைய தொழிநுட்பங்கள் அரசு போன்ற அதிகார நிறுவனங்கள் மக்கள்மீது மேலும் மேலும் அதிகாரம் செலுத்துவதற்குப் பெரிதும் உதவுகின்றன. 

கண்காணிப்பைக் குழப்பும் நடவடிக்கைகளை முன்னெடுத்தல், கண்காணிப்பவர்களைக் கண்காணித்தல், பெரும் வெகுமக்கள் எழுச்சி ஒன்றினை உருவாக்குவதன் மூலம் கண்காணிப்பினைச் சாத்தியமற்றதாக்கல் போன்ற வழிமுறைகள் கண்காணிப்பிற்கெதிராகப் பயன்படுத்தப்பட முடியும் எனக் கருதப்படுகிறது.