Sunday, February 10, 2013

கண்காணிப்புத் தொழிநுட்பங்கள்


கொழும்பு வீதிகளில் தற்போது கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் வீதிகளையும் ஆர்ப்பாட்டக்காரர்களையும் கண்காணித்தவண்ணம் வலம் வருகின்றன. தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாகப் பேசிக்கொள்ளப்படுகிறது. இணையத்தில் நாம் பகிரும் விடயங்கள் கண்காணிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் "கண்காணிப்பு" பற்றியும் அதற்குப் பயன்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் பற்றியும் நாம் தேடிக் கற்றுக்கொள்ளவேண்டியதாக உள்ளது. 

ஒற்றர்களைப் பயன்படுத்துதல், தொலைக் காட்டிகளைப் பயன்படுத்துதல் போன்ற பழைய முறைகளிலிருந்து வான்வழிக் கண்காணிப்பு, செய்மதிக் கண்காணிப்பு, புதுப்புதுத் தொழிநுட்பங்களின் துணையுடனான கண்காணிப்பு என்று கண்காணிப்பதற்கான முறைகள் வேகமான வளர்ச்சியடைந்து வருகின்றன. 

குறித்த செயற்பாட்டையோ, குறித்த விடயத்தையோ எமது கட்டுப்பாட்டுக்குள் நாம் வைக்கவேண்டி இருந்தால் ஒன்று அச்செயற்பாட்டினை, அல்லது மற்றவர்கள் அவ்விடயத்தை  அணுகுவதைத் தடை செய்ய வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அணுக்கத்தைக் கட்டுப்படுத்தாமல், தடை போடாமல் சுதந்திரமாக விட்டுக் கண்காணிக்க வேண்டும். 

இவ்வாறாகக் கண்காணிப்பு என்பது "கட்டுப்படுத்துவதுடன்" மிகவும் நெருக்கமானது. அரசுகளே உலகின் மிகவும் சக்திவாய்ந்த "கண்காணிக்கும்" அதிகாரங்களாக இருக்கின்றன. 

மிக நவீன கண்காணிப்புத் தொழிநுட்பங்களைப் பயன்படுத்தாத அரசுகள் தடைபோடுவதன் மூலமும் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வெகுமக்கள் மீதான ஆயுத அடக்குமுறைகள் மூலமாகவும் மக்களைக் "கட்டுப்பாட்டுக்குள்" வைத்திருக்க முயல்கின்றன. இவ்வாறான நாடுகள் சர்வாதிகார நாடுகளாகவும் மனித உரிமைகளை மீறும் நாடுகளாகவும் மேற்குலகின் ஊடகங்களால் பிரசாரம் செய்யப்படுகின்றன. ஆனால் அதேவேளை மேற்குலகமோ ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளோ மக்கள் மீதான மிகப்பயங்கரமான கட்டுப்பாட்டினை அதி நவீன கண்காணிப்புத் தொழிநுட்பங்களின் நடைமுறைப்படுத்துகிறது. இது பார்வைக்கு மக்கள் சுதந்திரம் பெற்றிருப்பதுபோல் தோற்றம் காட்டுகிறது. 

கண்காணிப்புத் தொழிநுட்பங்கள் பின்வரும் பரப்புக்களின் இன்று வளர்ச்சியடைந்துள்ளன :

கணினி 

கணினிகளைக் கண்காணிப்பதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நச்சு நிரல்களையும் உளவுபார்க்கும் நிரல்களையும் அரசுகளே தயாரித்து விநியோகித்திருப்பதற்கான சான்றுகள் பல இன்று கிடைக்கின்றன. அமெரிக்காவின் FBI நிறுவனம் கணினிகளைக் கண்காணிப்பதற்காக Magic Lantern எனும் உளவுபார்க்கும் நிரலினை தயாரித்துப் பயன்படுத்தியமை இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். 

இதுதவிர கணினியின் வேறு மென்பொருட்களும் இயங்குதளங்களும் கூட பயனர் பற்றிய தகவல்களை அவர் அறியாமலே வேறொரு நிறுவனத்துக்கோ தனி நபருக்கோ அனுப்பக்கூடியவண்ணம் உருவாக்கப்பட முடியும். 

தொலைபேசி

தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது தொடக்கம் தொலைபேசிக் கருவியை அடிப்படையாகக்கொண்ட வேறுபல சேவைகள் மூலம் கண்காணித்தல் வரை இதனுள் அடங்குகிறது. 

அமெரிக்காவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான AT & T நிறுவனமும் Verizon நிறுவனமும் அமெரிக்க அரச நிறுவனங்களிடமிருந்து ஆண்டொன்றுக்கு 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை தமது பயனாளர்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக மட்டும் பெறுவதாக தகவல் வெளிவந்துள்ளது. 


மில்லியன்கணக்கான மக்களின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்து ஒட்டுக்கேட்பதென்பது நேர விரயமாகவும் அதிக ஆள்பலம் தேவைப்படும் ஒன்றாகவுமே இருந்துவந்ததாயினும் குரல் உணரி மென்பொருட்களின் வருகைக்குப்பின் மிகவும் எளிமையான ஒன்றாக மாறியுள்ளது. இம்மென்பொருட்கள் குரலை உணர்ந்து, பேசப்படுபவற்றை உரை வடிவில் சேமிப்பதுடன், அவ்வுரையிலிருந்து தேவையான தகவல்களை நொடிப்பொழுதில் தேடித்தரவல்லனவாகவும் இருக்கின்றன. 

செல்பேசிக்கருவியின் ஒலிவாங்கியினை, இணையம் வழியாக தூர இருந்து பயனர் அறியாமல் இயக்கி ஒட்டுக்கேட்கும் வழிமுறைகள் அமெரிக்க, ஐக்கிய இராச்சிய அரசுகளிடம் இருப்பதாகவும் தகவல் உண்டு. 

இவை தவிர GPS எனப்படும் தொழிநுட்பம் மூலம் குறித்த செல்பேசிப்பயனாளர்களின் இருப்பிடம், நடமாட்டம் அனைத்தையுமே துல்லியமாகக் கண்காணித்து அத்தகவல்களைச் சேமித்துப் பயன்படுத்தும் வசதிகளும் இன்று உள்ளன. 

ஒளிப்படக்கருவிகள் 

இது நாம் வெளிப்படையாகக் காணும் கண்காணிப்புப் பொறிமுறையாகும். ஒளிப்படக்கருவிகள் வழியாகப் பிடிக்கப்பட்டுச் சேமிக்கப்படும் வீடியோக் கோப்புகளில் இருந்து குறித்த முகத்தை மட்டும் குறுகிய நேரத்தில் தேடி எடுத்துக் கண்காணிப்பதற்கான முகம் உணரும் தொழிநுட்பங்கள் இன்று பயன்பாட்டில் உள்ளன. 

சமூக வலையமைப்புப் பகுப்பாய்வு

Facebook, Twitter, Google+ போன்ற சமூக வலையமைப்புக்களில் ஒவ்வொருவரும் பகிரும் சொந்த விபரங்கள், எழுத்துக்கள், படங்கள் போன்றனவற்றை எல்லாம் முறைப்படி கணினி மென்பொருள்களின் துணையுடன் ஆய்வு செய்து குறித்த நபரையோ அமைப்பினையோ கண்காணிப்பதற்கான வழிமுறைகள் இன்று பிரபலமடைந்துள்ளன. இத்துறையானது Scalable Social Network Analysis (SSNA) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 

இவ்வாறு கண்காணிக்கும் துறை மிகவும் வளர்ச்சியடைந்திருப்பதுடன், இக்கண்காணிப்புப் பொறிமுறைகளை எளிமைப்படுத்துவதற்காக Hancock எனும் கணினி நிரலாக்க மொழியினை AT & T நிறுவனம் உருவாக்கியுள்ளது. 

இவைதவிர, உயிரியல் தகவல்களைக் கண்காணித்தல், வான்வழியாக, செய்மதியூடக, கண்காணிக்கும் சில்லுகள் பொதியப்பட்ட அடையாள அட்டைகள் ஊடாக கண்காணிக்கும் வழிமுறைகள் எல்லாம் இன்று பயன்பாட்டில் உள்ளன. 

பயங்கரவாதம், சமூகவிரோதச்செயல்கள் போன்றவற்றைத் தடுப்பதற்குக் கண்காணிப்புப் பொறிமுறைகள் தேவைப்படுகின்றன என்று கண்காணிப்புக்குச் சாதகமாக வாதிடப்படுகிறது. 

"நாம் சரியாக இருந்தால் கண்காணிப்புக்கு அஞ்சுவானேன்?" என்று வினவப்படுகிறது. 

ஃபூக்கோவின் கருத்துப்படி கண்காணிப்புத் தொழிநுட்பமானது, காவல்துறையின் அவசியம் இன்றி ஒவ்வொரு தனி மனிதரும் தமக்குத்தாமே உளவியல் ரீதியாக காவல் துறை அதிகாரி போன்று செயற்படும் நிலையை உருவாக்குகிறது. கண்காணிக்கப்படுகிறோம் என்ற எண்ணமே எமது செயற்பாடுகளை நாமே முடக்கிவிடக் காரணமாகிறது. 

கண்காணிப்புத் தொழிநுட்பங்கள் உண்மையில் அதிகாரம் உள்ளவர்களின் கைகளில் மேலும் மேலும் அதிகாரங்களைக் குவிக்கிறது. இது மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட அதிகாரமாகும். இத்தகைய தொழிநுட்பங்கள் அரசு போன்ற அதிகார நிறுவனங்கள் மக்கள்மீது மேலும் மேலும் அதிகாரம் செலுத்துவதற்குப் பெரிதும் உதவுகின்றன. 

கண்காணிப்பைக் குழப்பும் நடவடிக்கைகளை முன்னெடுத்தல், கண்காணிப்பவர்களைக் கண்காணித்தல், பெரும் வெகுமக்கள் எழுச்சி ஒன்றினை உருவாக்குவதன் மூலம் கண்காணிப்பினைச் சாத்தியமற்றதாக்கல் போன்ற வழிமுறைகள் கண்காணிப்பிற்கெதிராகப் பயன்படுத்தப்பட முடியும் எனக் கருதப்படுகிறது. 

1 comment: