Wednesday, February 6, 2013

தற்காலக் கவிதைகளில் படிமங்களும் குறியீடுகளும்

தமிழ்ப் புதுக் கவிதை எனப்படும் மரபுசாராச் செய்யுள் வடிவங்களின் தோற்றம் தமிழ் மரபுக் கவிதையின் நெருக்கடியின் நேரடியான விளைவல்ல. சிறுகதையையும் நாவலையும் போன்று, ஐரோப்பிய --அதினுங் குறிப்பாக ஆங்கில-- இலக்கியப் பரிச்சயத்தின் பயனான விளைவெனவே தமிழ்ப் புதுக் கவிதையைக் கொள்ள இயலும்.

புதுக் கவிதையின் வருகைக்கு முன்னரே வசன கவிதை என்பது பாரதியாற் கையாளப்பட்ட ஆனாற் பரவலாகாத ஒரு வடிவமாகும். அதுவும் வால்ற் விற்மனின் வசன கவிதைகளின் அருட்டுணர்வால் உருவானது எனலாம். மரபுச் செய்யுளின் இறுக்கமான எதுகை மோனை விதிகளைக் கைவிடல் இலங்கையில் தரமான புதுக்கவிதையின் தோற்றுவாயாயிற்று எனலாம்.

எவ்வாறாயினும் யாப்பின் பிற விதிகளதும் நெகிழ்த்தல் கவிதையின் முக்கியமான வேறு சில பண்புகளின் மீது கூடுதலான அழுத்தத்திற்கு வழிகோலியது. அவற்றுட் குறியீடும் படிமமும் முக்கியமாகின. சில வேளைகளிற் குறியீடும் படிமமும் புதுக் கவிதைக்கே உரியன என்றவாறும் பேசப்பட்டுள்ளது. உண்மை அதுவல்ல. அக் கூறுகள் எல்லாக் கவிதைகட்கும் உரியனவும் நெடுங்காலமாக இருந்துவந்தனவுமாம்.

உவமை என்பது இரு வேறு பொருட்களை அவற்றிடையே இல்பாகவோ வலிந்தோ காணப்படும் ஒற்றுமைகளின் அடிப்படையிலான ஒப்பீடாகும். உருவகம் என்பது அத்தகைய ஒற்றுமையின் அடிப்படையில் ஒன்றை மற்றொன்றாற் குறிப்பதாகும். இத்தகைய செயற்பாடு வரையறையின்றி விரியக்கூடிதாகும். இவற்றின் அடிப்படையில் குறியீடு, படிமம் எனுஞ் சொற்கள் எவற்றைக் குறிக்கின்றன எனக் கவனிப்போம்.

குறியீடு என்பது ஒரு பொருளை இன்னொன்றாற் குறிப்பதாகும். அங்கு உவமிக்கத்தக்க பண்புகள் இருக்கலாம். எனினும் அவ்வாறான இருப்பு அத்தியாவசியமானதன்று. கணிதத்திலும் விஞ்ஞானத்திலும் பயன்படுங் குறியீடுகள் ஆக மிஞ்சினால் அவை குறிப்பவற்றுடன் ஒலி அல்லது எழுத்து அடிப்படையிலான ஒரு தொடர்பைக் கொண்டிருக்கலாம். அதற்கப்பாலான ஒற்றுமை அரிதானது. அங்கு சிக்கனங் கருதிக் குறியீடு பயன்படுகிறது.

கவிதையில், ஒரு பொருளை நேரடியாக் குறிப்பதைத் தவிர்க்கும் தேவைகருதி அவ்வாறு நிகழ்கிறது. அவ்வாறான தவிர்ப்பு, குறியீடாகப் பயன்படும் பொருளின் பல்வேறு இயல்புகளின் பயனாக வேறுபட்டதும் விரிவானதுமான வாசிப்புக்கட்கு வழி செய்யலாம். வலுவான முறையில் அமைந்த குறியீடுகள் கூறவந்த பொருளுக்கு வலுவூட்டலாம். வலுவற்ற குறியீடுகள் விளங்கப்படாமலே போகலாம், அல்லது குழப்பத்துக்கு இடமளிக்கலாம். இங்கு எதையும் ஒரு விதியாக நான் கூறவில்லை. மாறாக, நிகழக்கூடிய சிலதை மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன். அவை படைப்பாளியின் நோக்கத்துக்குட்பட்டு நிகழலாம் என்பதையும் நான் மறுக்கவில்லை.

படிமம் என்ற சொல் சிற்பத்தையும் குறிக்கும். படிமம் என்பது, ஒரு குறியீடானவன்றி, அது குறிக்கும் பொருளைப் பற்றிய மனச் சித்திரம் ஒன்றையும் வழங்குகிறது. எனவே, கவிதை கூறப்படும் முறையில் அதன் பாடுபொருளைப் பற்றியும் கவிதை கூறும் பிற விடயங்களைப்பற்றியும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மனச் சித்திரங்கள் உருவாக்கப்படலாம். இவை கவிதை கூற முனையும் செய்திக்கு வலுவூட்டும் முறையிற் சில பண்புகளை அழுத்தியும் சிலவற்றை நெகிழ்த்தியும் சிலவற்றை மாற்றியும் வழங்கலாம். ஒரு பொருளை வழமையாக விளங்கிக்கொள்ளக்கூடிய முறைகளினின்று வேறுபட்ட அல்லது முரணான முறைகளிலும் அதை அதன் படிமம் வழங்கலாம். படிமத்தை உருவாக்குவதிலும் கையாளுவதிலும் காட்டப்படும் ஆற்றல் கவிதைக்கு வலுவுட்டும் என்பதற்கப்பால், ஒரு காலத்திற் போன்று இன்னது தான் ஏற்புடையது, எனக் கூறல் அரிது. எனினும், செய்நேர்த்தியும் அழகியலும் சில அளவுகோல்களை வழங்கலாம்.

புதுக் கவிதை செய்துள்ள குறிப்பிடத்தக்க ஒரு புதுமை ஏதெனின் படிமங்களையே கவிதையாக வழங்குவதை அது இயலுமாக்கிற்று. அப் போக்கு இப்போது நலிந்துள்ள போதும் படிமங்களதும் குறியீடுகளதும் மிகையானதும் தெளிவற்றதுமான பயன்பாடு வருந்தத்தக்களவில் தெடருகிறது எனலாம்.

சி. சிவசேகரம்

No comments:

Post a Comment