Friday, March 8, 2013

சமூக உற்பத்தியில் பெண்கள்


பெண்கள் மீதான ஒடுக்குமுறை அவர்களது உயிரியல் அடிப்படையிலானதன்று. மாறாக, அதன் தோற்றதுக்குப் பொருளியல், சமூகப் பரிமாணங்கள் உள்ளன.
எக் காலத்தும், சமூக உற்பத்தியிற் பெண்களின் பங்கு சமூக உற்பத்திச் சக்திகளின் விருத்தியிலும் உற்பத்தி உறவுகளிலும் தங்கியிருந்துள்ளது.
எனவே பெண்கள் மீதான பால் அடிப்படையிலான ஆதிக்கமும் ஒடுக்கலும் முழுச் சமூகத்தினதும் சுரண்டல் அடிப்படையிலான உற்பத்தி உறவுகளினின்று பிரித்து நோக்க இயலாதது.

சமூக உற்பத்தியில் பெண்களுக்கு விதிக்கப் பட்ட இடம் சமூக அமைப்புக்களின் மாற்றத்துடன் மாறி வந்துள்ளது.
வர்க்க சமூகத்தின் தோற்றதுக்கு முன், அதாவது "ஆதி கம்யூனிச" சமூகம் எனப்படும் அதி தொன்மையான சமூகத்தில் உற்பத்தி சமூக அடிப்படையில் அமைந்திருந்தது.
உற்பத்தியின் பயன்கள் சமமாகப் பகிரப்பட்டன.
உண்மையிற், சமூக உற்பத்தியின் உயர்விற் பெண்களின் பங்கு ஆண்களினதை விட மேலானதாக இருந்ததெனவுங் கூறலாம்.

சமூகத்தில் பெண்களின் தாழ்வு  தனியார் சொத்துடைமையாலும் குடும்பம் எனும் அமைப்பாலும் சமூக உற்பத்தியில் அவை நிர்ணயித்த வேலை ஒதுக்கீட்டாலும்  உருவானது.
வர்க்க அடிப்படையிலான வேலைப் பிரிவினை எவ்வாறு தொடங்கியதென்றோ அது எவ்வாறு பெண்கள் மீதான ஆதிக்கத்துக்கு இட்டுச் சென்றதென்றொ திட்டவட்டமாகக் கூற இயலாது.
எனினும், உற்பத்திச் சாதனங்கள் மீது (முதலில் மண்ணும் விவசாயக் கருவிகளும் விலங்குகளும்) தனியார் ஆதிக்கத்திற்குட்பட்டதோடேயே ஆணாதிக்கம் தொடங்கியது என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
அதன் பின்பு, அடிமைகளையும் உற்பத்திக் கருவிகளையும் போன்று பெண்களும் ஒரு ஆணின் உடைமையாக நேர்ந்தது.
பெண்களின் சமூக உற்பத்தி மூலம் அவர்களுக்குப் பொருள் மீது, முக்கியமாக சமூகத்தின் உற்பத்திச் சாதனங்கள் மீது, ஆதிக்கம் ஏற்படாவாறு சொத்துடைமை ஆண்களின் வசமாக்கபட்டது.
இவ்வாறு பெண்களின் உற்பத்திப் பங்களிப்பில் ஆணுக்குச் சேவையாற்றுவதும் அடுத்த தலைமுறை ஒன்றன் தோற்றமும் பராமரிப்பும் முதன்மை பெற்றன.
இதிற் குடும்பம் என்ற அமைப்பின் பங்கு முக்கியமானது எனக் காணுகிறோம்.

அடிமைச் சமுதாயத்திலும் பின்னர் வந்த நிலவுடைமைச் சமுதாயத்திலும் உழைக்கும் வர்க்கங்களில் இருந்த பெண்கள், மேலதிகமாக உடல் உழைப்பிலும் பங்குபற்றும் தேவை இருந்தது.
இவ்வாறு சமூக உற்பத்தியில் தமது ஆளுமை மறுக்கப் பட்ட பெண்கள் இயற்கையிலேயே, தமது உயிரியலமைப்புக்கமைய உடலாலும் உள்ளத்தாலும் ஆண்களிலும் கீழானோராகக் கொள்ளப்பட்டனர்.

முதலாளியம் பெண்ணை ஒரு உற்பத்திக் கருவியாக மட்டுமன்றி ஒரு பன்முகப்பட்ட நுகர்பொருளாகவும் வடிவமைத்துள்ளது.
முதலாளியம் தன் உற்பத்தியைப் பெருக்கி லாபத்தைக் குவிக்க இயலுமான வரை கூடிய உழைப்புச் சக்தியை வேண்டுகிறது. எனவே நவீன உற்பத்தியிற் பெண்கள் பங்கு பற்றுவது காலப் போக்கிற் தவிர்க்க இயலததாகியது.
எனினும் இது பெண்களுக்குச் சமத்துவத்தை கொண்டு வரவில்லை, மாறாக அவர்கள் மீதான சுரண்டற் சுமையை வலுப்படுத்தியுள்ளது.
முதலாளியம் குடும்பம் பற்றிய நிலவுடமைக் காலச் சிந்தனையைத் தனக்கு வசதியாகப் பயன்படுத்துகிறது.
அதே வேளை, பெண்ணை ஒரு நுகர்பொருளாக்குவது குடும்பம் என்கிற எல்லைக்கு அப்பாலும் விரிவடைந்துள்ளது.
சேவைத்தொழில்கள் என்பனவற்றின் விருத்தியுடன் பெண்ணின் உடல் வணிக நோக்கிலான சுரண்டலுக்கேற்பப் பலவாறாகவும் வடிவமைக்கப் பட்டு வருவது கவனிப்புக்குரியது.

தொழில் பார்த்தல் என்பது குடும்ப உழைப்பிலிருந்து விடுதலை என்று தோன்றினாலும் உண்மையிற் பெண்கள் மீதான உழைப்புச் சுமை அதனாற் குறையவில்லை.
ஊதியமில்லாத குடும்ப உழைப்பு, குறைந்த ஊதியத்திற்கான சமூக உற்பத்தி, தமக்காகப் போராடும் வலிமையின்மை எனும் வகைகளில் இன்று பெண்கள் முதலாளியத்தால் மிக அதிகம் சுரண்டப்படுகின்றனர்.

பெண் விடுதலை என்பது பால் அடிப்படையிலானதாக மட்டுமன்றறி உற்பத்தியிற் பெண்களின் சமூக நிலையையும் சார்ந்துள்ளது என்பதை இத்தால் வலியுறுத்த வேண்டியுள்ளது.

- 2012 ம் ஆண்டு மகளீர் தினத்தை முன்னிட்டு சமூக விஞ்ஞான வட்டத்தில் கலந்துரையாடப்பட்டவை.